ஆந்திரா மாநிலத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மே23ஆம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். இதனைத்தொடர்ந்து, வருகின்ற 30ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். இந்த சூழலில் இதன் முதல்கட்டமாக நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு மத்தியில் ஆதரவளிப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பிரதமர் மோடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பதவி ஏற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.