பெங்களூருவின் புலிகேசி நகர் தொகுதி, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் உறவினரான நவீனின் சமூக வலைதளத்தில், குறிப்பிட்ட மதம் தொடர்பான சர்ச்சைக் கருத்துகளை பதிவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்ட சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீடு, வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியது மட்டுமின்றி, கதவு, ஜன்னல்களை உடைத்தும் சூறையாடினர். இதனையடுத்து, அங்கு குவிந்த காவலர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனிடையே அப்பகுதி இஸ்லாமியர்கள் சிலர் ஒன்றுகூடி, வன்முறை காரணமாக அவரது வீட்டிற்கு எதிரில் உள்ள கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுவிடாதபடி மனித சங்கிலி அமைத்துப் பாதுகாத்தனர்.
இதுகுறித்து மனித சங்கிலியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் கூறுகையில், "எந்த சாதியினரிடமும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. சமூக ஊடகங்களில் சட்டப்பேரவை உறுப்பினரின் உறவினர்களது கேலிப் பதிவுகளுக்கு எதிராக தான் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
பெங்களூருவில் கலவரத்திற்கு இடையிலும் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் பாதுகாப்பு கொடுத்த காணொலி, தற்போது சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது.