கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ். இவரின் சொந்த ஊர் சிமோக மாவட்டத்தைச் சேர்ந்த மோடிபென்னூர். ஆகாஷ் எட்டு வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் பக்கத்து ஊரில் உள்ள பள்ளிவிடுதியில் சேர்த்துவைத்து படிக்கவைத்துள்ளனர்.
எதிர்பாராத சூழலில் விடுதியிலிருந்து தொலைந்துபோன ஆகாஷ் ஹூப்ளி மாவட்டத்திற்கு வந்துசேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக அங்குள்ள சந்தையில், சுமை தூக்கியாக வேலைசெய்துள்ளார். சிறுவனின் இந்நிலையைப் பார்த்து, அப்பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா, லக்ஷ்மி தம்பதியினர் தன்னுடன் அழைத்துச் சென்று சொந்த மகனாக வளர்த்துவந்துள்ளனர்.
ராகவேந்திராவிடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகாஷ் வளர்ந்துவந்த நிலையில், திருப்பமளிக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைத்தெருவில் ஆகாஷ் நின்றுகொண்டிருந்தபோது அருகே இருந்த மூதாட்டி இளைஞரின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்துள்ளார். இவரின் உடலசைவும், சைகைகளும் தொலைந்துபோன தனது பேரனை ஒத்துள்ளதைக் கவனித்த அவர், ஆகாஷிடம் விசாரிக்க அவர் தனது பேரன்தான் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டார்.
உடனடியாக ஆகாஷின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வளர்ப்பு தந்தை வீட்டுக்குவந்துள்ளனர். 15 ஆண்டுகளுக்குப்பின் பிள்ளையைப் பார்த்த நெகிழ்ச்சியில் திளைத்திருந்த அவர்கள் வளர்ப்புத் தந்தை ராகவேந்திராவிடம் தங்களது நன்றியை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரிந்த பெற்றோருடன் 15 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்த ஆகாஷ், வளர்ப்புப் பெற்றோரை என்றும் மறக்கமாட்டேன் எனவும், இரு குடும்ப உறவுக்கும் பாலமாக விளங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் வருகிறது 90'ஸ் கிட்ஸ்களின் ஸ்கூபி டூ: வைரலாகும் ட்ரெய்லர்!