இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக, பயணிகள் ரயிலை இயக்க தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ரயில்வே துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் 35 ஆண்டுகளுக்கு ரயிலை இயக்கலாம்.
109 வழித்தடங்கள் வழியாக 151 ரயில்களை இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் இளைஞர் அணி உறுப்பினர்கள் தலைநகர் டெல்லியில் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "2014ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் ஆளும் பாஜக அரசின் பொதுத் துறைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ரயில்வே துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாங்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என கூறப்பட்டுள்ளது.