தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் மல்யாலா கிராமத்தைச் சேர்ந்தவர் அடேபு ராஜகோபால் (Adepu Rajagopal). இவருக்கு திங்கட்கிழமை பிறந்த நாள் என்பதால், நண்பகல் வரை குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்துள்ளார். பின்னர், மாலை நேரத்தில் தனது நண்பர்களுக்கு கல் விருந்து அளிக்க முடிவு செய்து, வீட்டின் அருகில் உள்ள இடத்தில் அனைவரும் ஒன்று திரண்டு கல் குடித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பார்ட்டி குறித்த தகவல் காவல் துறைக்குத் தெரிந்து விட்டதாகவும், பிடிப்பதற்காக காவல் துறையினர் வருகிறார்கள் எனவும் தகவல் கசிய, அனைவரும் அப்பகுதியிலிருந்து தெறித்து ஓடினர். அப்போது, வேகமாக ஓடிய ராஜகோபால், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த அவரின் நண்பர்கள் ராஜகோபாலைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் நண்பனின் சடலத்தை உயிரிழந்த நிலையில் தான், அவர்களால் மீட்க முடிந்தது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ராஜகோபால் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டமே, அவரது உயிரைப் பறித்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாகையில் நான்காயிரம் லிட்டர் மதுபானம் மண்ணில் ஊற்றி அழிப்பு!