இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்கள் பலரும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் யோகாவின் ஆற்றலை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பிரதமர் மோடி என தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "யோகாவை நம் அன்றாட வாழ்க்கையில் கொண்டு வந்தால், நம் உடலால் கரோனா போன்ற ஆயிரக்கணக்கான நோய்களை சமாளிக்க முடியும். சர்வதேச யோகா தினத்தில் யோகா பயிற்சி கண்டிப்பாக செய்வோம் என்ற உறுதிமொழியை எடுப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்" எனப் பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்த சிவ்ராஜ் சிங், "நான் பல ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன். அதன் பலன்களை நான் நன்றாக உணர்கிறேன். யோகாவின் வலிமையால் தான் 16 மணி நேரம் ஓய்வில்லாமல் வேலை செய்ய முடிகிறது. நான் காலையிலேயே சீக்கிரம் பணிக்குப் புறப்பட்டுவிட்டால், காரிலேயே சாத்தியமான சுவாசப் பயிற்சி செய்வேன்" எனத் தெரிவித்தார்.