நிதி மோசடி புகாரில் சிக்கி அண்மையில் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்குச் சொந்தமான ஏழு இடங்களில் சிபிஐ அலுவலர்கள் தற்போது சோதனை மேற்கொண்டுவருகின்றனர். டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனர் கபில் வாத்வானுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி ராணா கபூரை அமலாக்கத் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஊழல் புகாரில் சிக்கியிருந்த டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்திற்கு யெஸ் வங்கி மூன்றாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியதாகவும், அந்நிறுவனத்திடம் ராணா கபூர் குடும்பத்தினர் 600 கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவில் பல்வேறு முதலீடுகளை ராணா கபூர் குடும்பம் மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடமிருந்து ராணா கபூர் வாங்கிய விலைமதிப்புமிக்க 44 ஓவியங்களையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
தற்போது இந்த வழக்கில் அமலாக்கத் துறையுடன் சிபிஐயும் இணைந்துள்ளதால், ராணா கபூரை விரைவில் சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: '98 வயதில் 98 மார்க்' நான்காம் வகுப்பு தேர்ச்சி; மூதாட்டியிடம் உரையாடிய பிரதமர்!