கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் பதவி வழங்கவில்லை எனக் கூறி 15 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலையில் உள்ளது. இருப்பினும் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் ரமேஷ்குமார் காலம் தாழ்த்தி வருவதால், எம்எல்ஏக்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரியிருந்தனர். அதன்படி இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளனர்.
இந்நிலையில், தங்களது கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் எதிரணிக்கு சென்றுவிடக்கூடாது என பாஜக தலைமை முடிவு செய்து அவர்களை பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அவர்களை பார்க்கச் சென்ற முன்னாள் முதலமைச்சரும், பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா, அங்குள்ள மைதானத்தில் எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இதைத்தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியிலும் எடியூரப்பா கலந்துகொண்டு ரசித்தார். தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.