ஆந்திராவில் அமராவதியை தலைநகராக மேம்படுத்த, தங்கள் நிலங்களை அளித்துள்ள அப்பகுதி விவசாயிகள், அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்று தலைநகரங்களைக் கொண்டுவரும் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக அமராவதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், இன்று சின்ககானி கிராமத்தையொட்டிய நெடுஞ்சாலையில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தின் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணா ரெட்டியின் கார் இந்த நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, விவசாயிகள் அவரது வாகனத்தை வழிமறித்து கலவரத்தில் ஈடுபடத் துவங்கினர். அமைச்சரின் பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றும், போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சென்று போராட்டகாரர்களிடமிருந்து ராமகிருஷ்ணா ரெட்டியை மீட்டு வாகனத்தை அப்பகுதியிலிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அமராவதிக்கு நோ, விசாகப்பட்டினத்துக்கு எஸ் - பிசிஜி அறிக்கை