உலகளாவிய சுகாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கவுன்சிலர் பிரதிக் மாத்தூர், எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள நீண்ட காலத்திற்கான வியூகங்கள் வகுப்பது அவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சுகாதாரமான வாழ்க்கை வாழ்வது என்பது அனைவரின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசுகள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறைவான விலையில் மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை அனைவருக்கும் எடுத்துச் செல்வதில் சிக்கல் உள்ள நிலையில், எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள நீண்ட காலத்திற்கான வியூகங்கள் வகுப்பது அவசியமாகிறது.
குறைவான விலையில் சுகாதாரச் சேவையை அனைவருக்கும் அளித்து சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏழு உறுப்பு நாடுகள் சார்பில் இந்தோனேசியா இந்தாண்டு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொற்றுநோய் தயார்நிலைக்கான சர்வதேச தினம் குறித்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில் யோகா, ஆயுர்வேதா ஆகியவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறைவான விலையில் மருந்து, நோய் தடுப்பு, மருந்துகளை விநியோகம் செய்வதை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சுகாதாரத்துறையில் முழுமையான நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது" என்றார்.