கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தில் உள்ள தபால் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பசுமையான பூங்கா ஒன்று, அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இந்த கண்கவர் பூங்கா, மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக தபால் அலுவலக ஊழியர்களால் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய தபால் அலுவலகத்தின் மூத்த அஞ்சல் கண்காணிப்பாளர் கே. பசவராஜ், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையே ஊழியர்களின் இந்த முயற்சிக்கு வழிவகுத்தது என்றும், தபால் நிலையத்திற்கு வருகை தரும் பொது மக்கள் பூங்காவில் அமர்ந்து தங்களது சோர்வைப் போக்கிக் கொள்வதோடு, பூங்காவை முறையாக பராமரிக்கும் பணியாளர்களை பாராட்டி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பரபரப்பான தங்கள் வேலைகளுக்கு நடுவிலும், தபால் அலுவலக ஊழியர்கள் இப்பூங்காவை தூய்மையாகப் பராமரித்து வருகின்றனர்.
மீன், ஆமைகளுக்கான சிறிய தொட்டிகள், தாமரை தொட்டி, சொட்டு நீர்ப்பாசன முறை, 25 வகைகளுக்கும் மேற்பட்ட பூச்செடிகள், தென்னை மரங்கள், கரும்புப் பயிர்கள், தினம் வந்து செல்லும் புறாக்கள் என கரோனா ஊரங்கின் மத்தியிலும் பொலிவிழக்காமல் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
மேலும், அருகிலுள்ள தபால் அலுவலகங்களுக்கும் இந்த தபால் அலுவலகப் பூங்கா முன்மாதிரியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : இயற்கை அன்னையை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுங்கள் - அமிதாப் பச்சன்