கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த இக்கட்டான சூழலில், நோயாளிகளுக்குப் பாதுகாப்பான ரத்தம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால், பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரத்தம் தேவைப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில், பாதுகாப்பான ரத்தம் கிடைப்பதை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏபிஓ (ABO) ரத்த வகைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற அறிவியல் அறிஞர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இன்று ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டில் ரத்தம் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்தம் இருப்பதை உறுதிசெய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தன்னார்வ நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிகளவில் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
'பாதுகாப்பான ரத்தம் உயிர்களைப் பாதுகாக்கும்' (Safe blood saves lives) என்ற தலைப்பில் ரத்ததான தினம் இந்தாண்டு அனுசரிக்கப்படுகிறது. ரத்தம் தேவைப்படுபவர்களுக்குப் பாதுகாப்பான ரத்தம் கிடைப்பதை உறுதிசெய்வதை நோக்கமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தன்னார்வலர்களிடமிருந்து உரிய முறையில் ரத்தம் பெறப்பட்டு, அது பாதுகாப்பான முறையில் பதப்படுத்தப்பட்டு, தேவையானவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.
தி லான்செட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் அதிகப்படியான ரத்தப் பற்றாக்குறை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் 41 மில்லியன் யூனிட் ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது. ரத்தத்திற்கான தேவையும் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது.
2008 முதல் 2015ஆம் ஆண்டு வரை தன்னார்வ கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் ரத்தம் என்பது 11.6 மில்லியன் யூனிட் வரை அதிகரித்துள்ளது. அதாவது 78 நாடுகள், தங்கள் ரத்த விநியோகத்தில் 90 விழுக்காட்டிற்கும் மேல் அதிகமான ரத்தத்தை இலவசமாக ரத்தம் தரும் கொடையாளர்களிடமிருந்து பெற்றுள்ளன. இருப்பினும், 58 நாடுகள், தேவைப்படும் ரத்தத்தில் 50 விழுக்காட்டை ரத்தம் தேவைப்படும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறுவதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வின்படி, டெல்லியில் பிறக்கும் 18 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ரத்த சோகை உள்ளது. டெல்லியில் மட்டும் ஆண்டுதோறும் 200 குழந்தைகள் ரத்த சோகை குறைபாடுடன் பிறக்கின்றன. இப்பாதிப்புடைய அனைவருக்கும் இரண்டு முதல் நான்கு வாரத்திற்கு ஒரு முறை ரத்த மாற்றம் அவசியமாகிறது.
இதற்கு ஆண்டுதோறும் சராசரியாக ஒரு நபருக்கு 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ரத்த சோகையுடைய ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ரத்த சோகையை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: எகிறும் எண்ணெய் விலை : எட்டே நாளில் ஐந்து ரூபாய் உயர்வு!