நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். பலர் தாமாக முன்வந்து மருத்துவனைகளில் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், நோயாளிகளிடமிருந்து மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் கரோனா தொற்று பரவிவருவதால் சிறந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் அவர்கள் பணியாற்றிவருகின்றனர். குறிப்பாக, மருத்துவர்கள், செவிலியர் கட்டாயமாக பிபிஇ உடை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் 6 முதல் 8 மணி நேரம் தொடர்ச்சியாக பிபிஇ உடை அணிவதால் உடலில் தடுப்புகள், சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் அம்ரிந்தர் சிங் கூறுகையில், "தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. ஆனால் பிபிஇ கிட் பிளாஸ்டிக், நைலான் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளதால், காற்றுகூட உள்ளே வராத அளவிற்கு முழு உடலையும் மூடி மறைக்கிறது.
இதனால் தொடர்ச்சியாகப் பணி செய்கையில் மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படுகிறது. தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது. பிபிஇ உடையால் உடலில் வெப்பம் அதிகரித்து முகத்தில் வியர்வை உண்டாகிறது. ஆனால், அதைத் துடைக்கக்கூட முடியாமல் தவிக்கிறோம். இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்னைகளைச் சந்தித்துவருகிறோம்" என்றார்.