குஜராத் மாநிலம் அகமதாபாத் ஐ.ஐ.எம் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணி நடைபெறுகிறது. இதில் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பலர் தங்களது ஊர்களுக்கு திரும்புகின்ற நிலையில், இவர்களும் தங்களது மாநிலத்திற்குச் செல்ல முயன்றனர். இதற்காக, கட்டுமான பணியில் ஈடுபட்டதற்கான தொகையை தருமாறு ஐ.ஐ.எம் இயக்குநரிடம் கேட்டனர். ஆனால் அவர்களுக்குரிய பணத்தை கொடுக்கவில்லை, மார்ச் 28 முதல் ஊர்களுக்குச் செல்ல அனுமதியும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த 300 புலம்பெயர்ந்தோர், ஐ.ஐ.எம்-இன் புதிய வளாகத்திற்கு வெளியேயுள்ள சாலையில் பொதுமக்கள், காவல்துறையினர் மீது கற்களை வீசி, தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்க கோரினர். இதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அதில், 36 தொழிலாளர்கள் மட்டும் கரோனா சோதனையின் முடிவுகள் வராததால், அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, தொழிலாளர்கள் சார்பாக வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் ஐ.ஐ.எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாகவும், அவர்கள் வீட்டிற்கு செல்வதைத் தடுப்பது குறித்தும் விளக்கமளிக்குமாறு குறிப்பிட்டப்பட்டிருந்தது. சரியான விளக்கம் அளிக்கப்பட்டாத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்போவதாக வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் மோசடி : உ.பி. அரசு