டெல்லி : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 40 பெண் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால், கடந்த 14ஆம் தேதியன்று கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.
முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆள் ஆரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை அப்பகுதியிலுள்ள சிலர் மீட்டனர். பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று(செப்.30) உயிரிழந்தார். அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
உத்தரப் பிரதேச அரசின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் 40 பெண் வழக்குரைஞர்கள் அடங்கிய குழுவொன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், "நாட்டையே உறைய வைத்துள்ள ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை, படுகொலை வழக்கில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். அந்த வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த காவல்துறை பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் என அனைவரையும் உடனடியாக பதவி இடைநீக்கம் செய்ய வேண்டும்.
அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் இறுதி நிகழ்வில் கூட ஈவு இரக்கமற்ற முறையில் அம்மாநில காவல்துறையினர் நடந்துகொண்டது சட்டப்படியும், மனிதாபிமானம்படியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை நள்ளிரவில் அவசரமாக தகனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அவர்களின் மத நம்பிக்கைகளை பின்பற்றக் கூட உரிமை இல்லையா ? தொடக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த அரசும், நிர்வாகமும் இவ்வழக்கில் மோசமாக நடந்துவருகின்றன.
மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவிவருகிறது. இவற்றை எல்லாம் கவனத்தில் வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கு உதவ உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும்.
அவர்களின் அடிப்படை, மனித உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்பட போதுமான நிறுவன வழிமுறைகள், வழிகாட்டுதல்களை அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும்.
ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை, படுகொலை வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கு குறித்து நீதி விசாரணைக் கோரி சமூக செயல்பாட்டாளர் தெஹ்ஸீன் பூனாவாலா, டெல்லி பெண்கள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.