கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, அக்கட்சி தலைவர் ஓவைசி கூட்டத்தில் பேச எழுந்தபோது மாணவி ஒருவர் பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், "கோஷம் எழுப்பிய மாணவிக்கு பின்னே ஒரு அமைப்பு உள்ளது. அந்த அமைப்புக்கு எதிராக நடிவடிக்கை எடுக்கவில்லை எனில் இது போல் சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது. சட்டம் ஒழுங்கை கெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவிக்கு பின்னே இருக்கும் அமைப்பை விசாரித்தால் உண்மை வெளிவரும்.
அம்மாணவிக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் தந்தையே அவரை தண்டிக்க வேண்டும், பிணை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்" என்றார். கூட்டத்தை நடத்தியவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிக்மங்களூரில் அமைந்துள்ள மாணவியின் வீட்டருகே சிலர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாணவி எழுப்பிய கோஷம்: சர்ச்சையை கிளப்பிய ஓவைசி கூட்டம்!