கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலினால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனியார் தொழில்துறைகள் தொடங்கி, அரசு அலுவலகங்கள் வரை அனைத்தும் ஸ்தம்பித்துக்கிடக்கின்றன. அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து பிறவற்றிற்கு வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், சூரியப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரேஷ்மா பிரசவ வலியால் துடித்திருக்கிறார்.
ஏற்கெனவே, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரேஷ்மாவின் உடலில் போதிய வலிமையில்லாததால், பிரசவ வலியைத் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். மனைவியின் நிலைக் கண்ட கணவர் வெங்கண்ணா 108-க்கு அழைத்தார். ஆனால், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இதையடுத்து, மனைவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் மருத்துவ உதவியில்லாமலேயே, ரேஷ்மா பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குப் பின்பு, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் தாயையும், சேயையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஏற்கெனவே, சாலையோரத்தில் பிரசவம் நடந்திருக்க, உடனடியாக, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயச் சூழலில், மகப்பேறு மருத்துவரோ, குழந்தைப்பேறு மருத்துவரோகூட சூரியப்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லை. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கரோனாவை தடுக்க தொழில்நுட்ப கருவி