கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது, வேதனை அளிக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹரோவா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், சாலையோரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில், மேற்கு வங்கத்தின் சோனார்பூரில், இதேபோன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டதாகவும், இதன் காரணமாக மாநிலத்தில் பயங்கரவாத சூழல் உருவாக்கியுள்ளது என்றும் பாஜக விமர்சித்துள்ளது.