மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ. வழக்குப் பதியும் அதிகாரத்திற்கு அளித்த ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு நேற்று (அக்.21) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாநில அரசின் பொது ஒப்புதல் பெறாமல், குற்ற விசாரணைகளை மேற்கொள்ள உச்சப்பட்ச அதிகாரங்களை பயன்படுத்த மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 22, 1989 அன்று பிறப்பித்த அனுமதியை அரசு திரும்பப் பெறுகிறது. மேலும், மகாராஷ்டிரா அரசின் அனுமதிப்பெறாமல் இனி எந்தவொரு விஷயத்தையும் விசாரிக்கக் கூடாது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து இன்று (அக்டோபர் 21) ஊடகங்களைச் சந்தித்து பேசிய சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், "இந்திய ஒன்றிய அளவிலான பிரச்னையைப் பொறுத்தவரையில், விசாரிக்க சிபிஐக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே எங்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ள மாநில விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதால் இந்த முடிவை எடுக்க வேண்டி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசும், அதன் காவல்துறையும் அரசியலமைப்பின் படி தங்கள் சொந்த உரிமைகளைக் கொண்டுள்ளன. இந்த உரிமைகளை யாராவது பறிக்கவோ, துஷ்பிரயோகம் செய்யவோ முயன்றால், அரசு இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.