இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும், பொதுப் போக்குவரத்து இன்னும் முழுவீச்சில் தொடங்கவில்லை. தேவை அதிகரிக்காத பட்சத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுவருவதால் போக்குவரத்து துறையினர் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
தேசிய தலைநகர் பகுதியில் திங்கட்கிழமை பெட்ரோல் விலை உயராதபோதும், டீசல் விலை 11 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், டெல்லி அரசின் புதிய மதிப்புக் கூட்டு வரி காரணமாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பெட்ரோலைவிட டீசல் விலை அதிகமானது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விலை உயர்வு காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் 81.05 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 29ஆம் தேதி ஐந்து பைசா உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை அதன்பின் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற மாநிலங்களிலும் எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டாலும், டீசலின் விலையானது பெட்ரோலின் விலையை விட ஆறு முதல் எட்டு ரூபாய் வரை குறைவாகவே உள்ளது. ஊரடங்கு காரணமாக சுமார் 82 நாள்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதி முதல் அறிவிக்கபட்ட விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை 9.5 ரூபாய் வரையும் டீசல் விலை 11.5 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த வாரம், நான்கு நாள்கள் எரிபொருள்களின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவுடனான வர்த்தகம் - அமெரிக்கா முதல் இடம்!