மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை ஒன்பது மணிக்கு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்குப் புதிதாக, 6,654 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 137 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், நாட்டில் இப்பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 3,250 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,784ஆக அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 69,597 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று மகாராஷ்டிராவில் 2,940 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து, அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 12,583 பேர் குணமடைந்த நிலையில், 1,517 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, கரோனாவால் அதிக பாதிப்புகளான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். 7,128 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குஜராத்தில் இதுவரை 13,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 802 பேர் உயிரிழந்த நிலையில், 5,880 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிபெயர் தொழிலாளர்களின் கதையை யூ-ட்யூபில் வெளியிட்ட ராகுல்