காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோரின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு பறிக்கப்பட்டதையடுத்து, டெல்லியின் மிகவும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் ஒன்றான லோதி சாலையில் உள்ள லுடியென்ஸின் பங்களாவிலிருந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வெளியேறுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தன்னை அதே பங்களாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமென பிரியங்கா காந்தி மத்திய அரசிடம் கோரியதாக செய்திகள் வெளியானது.
அந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, இது தொடர்பாக பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், "என் பெயரில் வெளியான ஊடக அறிக்கையானது போலியானதாகும்.
லோதி சாலை பங்களாவிற்காக நான் மத்திய அரசிடம் இதுபோன்ற எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. ஜூலை 1ஆம் தேதி என்னிடம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்படைத்த நோட்டீஸின் படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் நான் அந்த இல்லத்தை விட்டு வெளியேறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுயநினைவிழந்த புரட்சிகர கவிஞர் வரவர ராவ் - இப்போதாவது பிணை வழங்குமா அரசு?