மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைந்து இன்றுடன் 100 நாள்கள் ஆனதை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி சென்றார். அவருடன் ஏராளமான சிவசேனா தொண்டர்களும் அயோத்திக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "பாஜகவுடன் விலகியுள்ளேனே தவிர இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகவில்லை.
பாஜக ஒன்றும் இந்துத்துவம் அல்ல. அயோத்தியில் ராமர் கோயி்ல் கட்டுவதற்காக என் அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். கடைசியாக 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அயோத்திக்கு வந்தேன். அப்போது, ராமர் கோயில் பிரச்னையிலிருந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, நான் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டேன்.
மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். நான் எப்போது இங்கு வந்தாலும் நல்ல செய்தி கிடைக்கும்" என்றார். முன்னதாக, நடைபெறவிருந்த ஆரத்தி நிகழ்ச்சி கொரோனா தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை - மத்திய அமைச்சர்