உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி, இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு, பிரேசிலில் ஜேர் போல்சனாரோ என சொல்லிக் கொண்டே செல்லலாம். இந்நிலையில், தீவிர இடதுசாரிகளை வீழ்த்துவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவின் 244ஆவது சுதந்திர தின விழாவின் 'சல்யூட் டு அமெரிக்கா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செயல்படும் தீவிர இடதுசாரிகள், போராட்டக்காரர்கள், கொள்ளையர்கள் ஆகியோரை வீழ்த்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
நாஜிக்களை வீழ்த்தி, பாசிஸ்டுகளை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து, கம்யூனிஸ்ட்களை தடம் தெரியாமல் ஆக்கிய அமெரிக்க ஹீரோக்கள், விழுமியங்களை பாதுகாத்து வருகின்றனர். அமெரிக்க கொள்கைகளை பின்பற்றி பயங்கரவாதிகளை இறுதி வரை துரத்தி அடித்துள்ளனர். இனத்தை முன்னிறுத்தி குடிமக்களை பிரிக்க விட மாட்டோம். வெறுப்பு, அவ நம்பிக்கை, மாற்றுக் கருத்து பரப்புபவர்களை விட மாட்டோம்.
தலைவர்களின் சிலைகளை உடைத்து, சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்து, வரலாற்றை அழிக்க நினைக்கும் கும்பலை விட மாட்டோம். விழுமியங்கள், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றைப் பாதுகாப்போம். கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு அமெரிக்கா சிறப்பாக செயலாற்றி வந்தது. கரோனா குறித்த ரகசியத்தை சீனா பாதுகாத்ததன் மூலம் உலகம் முழுவதும் வைரஸ் பரவி விட்டது. இதற்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் !