குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான பேருந்து வசதி ஏற்பாடு செய்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அதிதி சிங் சொந்த கட்சியையே விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அதிதி சிங் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், சபாநாயகர் அவரைத் தகுதிநீக்கம் செய்யவில்லை என்றால், நீதிமன்றம் செல்வோம் எனவும் காங்கிரஸ் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் மிஸ்ரா பேசுகையில், ''அக்.2ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் விதிகளை மீறி அதிதி சிங் கலந்துகொண்டார். அதற்காக அவருக்குக் கட்சியின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசிற்கு பதிலளிக்கக் கோரி நினைவூட்டலும் செய்யப்பட்டது. ஆனால் அவர் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
இதனால் அதிதி சிங்கை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மூன்று மாத கெடு முடிவதற்கு இன்னும் 15 நாள்களே உள்ளன.
சபாநாயகரின் நடவடிக்கை எங்களுக்குச் சாதகமாக வந்தால் நாங்கள் வரவேற்போம். ஒருவேளை எங்களுக்கு எதிராக வந்தால் நிச்சயம் உயர் நீதிமன்றத்தை நாடுவோம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிந்தியா கோட்டையைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி