நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை எவ்வாறு காய்கறிகளிலிருந்து பெறமுடியுமோ, அவற்றைப் பழங்களிலிருந்தும் பெறலாம். பழங்களில் அதிகளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் நாவிற்கு இனிப்பு சுவையூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து வி.எல்.சி.சி. ஹெல்த்கேரின் ஊட்டச்சத்து திட்டத் தலைவர் மருத்துவர் தீப்தி வர்மா நம்மிடம் பேசுகையில், “பழம் என்பது தாவரத்தின் விதை தாங்கும் ஒரு பகுதியாகும். இந்தப் பழங்களை உட்கொண்டால் ஏராளமான ஆரோக்கிய பயன்கள் உடலுக்கு கிடைக்கின்றன. இவை மிகவும் சத்தானவை. நார்ச்சத்துகள் அடங்கிய நல்ல மூலப்பொருள் உடையவை” எனத் தெரிவித்தார்.
பழங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் நம்மிடம் விவரிப்பதாவது:
பழங்களின் நன்மைகள்
1.பழங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஹைப்போ தைராய்டிசம், இதய நோய்கள், நீரிழிவு நோய், பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஹார்மோன் கோளாறு (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) போன்றவற்றுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
2. பழங்களில் பிரக்டோஸ் (அதிக இனிப்பு) என்ற பழ சர்க்கரை உள்ளது. இது ரத்தத்தில் இன்சுலின் வெளியீட்டை நிலைப்படுத்தவும், நீரிழிவு குறைபாட்டைச் சரிசெய்யவும் உதவுகிறது.
3. பழங்கள் மிகவும் ஆரோக்கியமான நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்தவை ஆகும். உதாரணத்திற்கு வைட்டமின்கள், தாதுக்கள். இவை உடலின் வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
4. பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், எலும்புகள் வலுவாவதற்கும், பற்கள் தொடர்பான பிரச்னைகள் சரியாவதற்கும் உதவுகிறது. அத்துடன் சிறுநீரக கற்களை வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.
5. மேலும், பழங்களில் பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?
பழங்களில் பல நன்மைகள் இருப்பதால், தினமும் அதை எடுத்துக்கொள்வது நல்ல பழக்கமாகும்.
- பழங்களை மற்ற உணவுகளுடன் சேர்க்காமல் தனித்துச் சாப்பிட வேண்டும்.
- உதாரணமாக வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட வேண்டும். காரணம் என்னவென்றால், ரத்தத்திற்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை எடுத்துக்கொள்ள இது சிறந்த வழியாகும். ஆனால், மற்ற உணவுகளுடன் பழங்களைச் சேர்த்து சாப்பிடும்போது அவை ரத்தத்திற்குத் தேவையான சத்துகளை உறிஞ்சவிடாமல் தடுத்துவிடும்.
நீரிழிவு நோயாளிகள் பழங்களை உண்ணலாமா?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பழங்களைச் சாப்பிடலாமா? வேண்டாமா? எவ்வளவு உட்கொள்ளலாம்? அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு மருத்துவர் தீப்தி பதிலளித்ததாவது:
நீரிழிவு நோயாளிகளுக்கு நிச்சயமாக பழங்கள் உண்ணும் பழக்கம் இருக்கும். பழங்கள் ரத்த காரத்தை உருவாக்குகின்றன, இது எப்போதும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நல்ல வளர்சிதை மாற்றத்திற்கும் பயனளிக்கும்.
மேலும், பழங்களில் உள்ள பிரக்டோஸ் ரத்த குளுக்கோஸை நிலைப்படுத்த உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியாக உட்கொள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஆகவே, நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் பழங்களை எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஒருவர் ஒரு நேரத்தில் 100-125 கிராம் அளவு மட்டுமே பழங்களை உண்ணலாம். அதைவிட அதிகமாக சாப்பிடக் கூடாது.
செயற்கை சர்க்கரையால் உருவான இனிப்புகள், பலகாரங்களை உட்கொள்வதைவிட பழங்களை உண்பதே சிறந்த ஆரோக்கியத்திற்கான வழியாகும். "சிறந்த ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குறைந்தபட்சம் 100 கிராம் அளவிற்காவது அந்தந்தப் பருவகால பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றன". ‘ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் மருத்துவரை அணுக அவசியம் இல்லை’ என்று சொல்வதுபோல், தினமும் ஒரு பழத்தை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழங்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
- நீர்ச்சத்தைச் சீர்படுத்தி உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
- நார்ச்சத்துள்ள பழங்கள் அதிகம் உண்பதால் மலச்சிக்கல், நீரிழிவு, உடல் பருமன் பிரச்னைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- சருமத்தில் உள்ள வறட்சியை போக்குகிறது. இது பெண்களுக்கு ஒரு அழகு குறிப்பாகவும் பயன்படுகிறது.
- மருத்துவத்தில் மருந்தாகவும் பழங்கள் செயல்படுகின்றன. உதாரணமாக சளி பிடித்தவர்கள் மாதுளை, பெரிய நெல்லி (amla) சாப்பிடுவதால் சளி கிருமியின் தாக்கம் குறைகிறது. ஏனென்றால் இவற்றில் 'வைட்டமின் சி' அடங்கியுள்ளது.
- வைட்டமின் சி (amla) அடங்கிய பழங்கள் உண்பதால், அவை உடலிலுள்ள இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்குகிறது. இதனால் முதுமையிலும் இளமைத் தோற்றமும் உத்வேகமும் உண்டாகும்.
- தினமும் ஒரு பழம் எடுத்துக்கொண்டால் எண்ணிலடங்கா பல நன்மைகளைப் பெறலாம். நோயின்றி வாழ பழங்களும் ஒரு முக்கியக் காரணியாகும் என்பதை மனத்தில் வைத்து பின்பற்றினால் நோயின்றி வாழலாம்!
இதையும் படிங்க: 'மழலையின் பல் பராமரிப்பு... புன்னகையின் திறவுகோல்!'