ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவரும் சிறப்புத் தகுதிகள் பறிக்கப்பட்டு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பாஜக அரசு பிரித்துள்ளது. சட்டப்பேரவை உடைய ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், சட்டப்பேரவை இல்லாத லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தது.
இது குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 1994ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இப்போது, ஜம்மு - காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை என்னவாகும்" என்றார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், "நாட்டுடன் நாங்கள் இருக்கிறோம். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை என்னவாகும் என்பதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" என்றார்.