புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மீன்பிடி துறைமுகம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நிவர் புயல் எச்சரிக்கைக்கு முன்பு நூற்றுக்கு மேற்பட்ட விசை, பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், புயல் குறித்த தகவல் வாக்கி டாக்கி உள்ளிட்ட தொலைதொடர்பு கருவிகள் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பலர் கரை திரும்பிய நிலையில், கிளிஞ்சல்மேடு கிராமத்தில் 2 விசைப்படகுகள், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தில் 9 விசைப்படகுகள், கீழ காசாக்குடி மீனவ கிராமத்தில் 9 விசை படகுகள், அக்கம் பேட்டையில் ஒரு படகு, காரைக்கால் மேட்டில் 3 படகுகள் கரை திரும்பாததால், அதில் மீன்பிடிக்க சென்ற 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை குறித்து அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கரைதிரும்பாத மீனவர்களின் வருகைக்காக கடற்கரைப் பகுதியிலேயே அவர்களது உறவினர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், மீனவர்கள் மல்லிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், சென்னை, கோடியக்கரை, கிருஷ்ணராஜ பட்டினம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் கரை சேர்ந்துள்ளதாகவும், சில மீனவர்கள் கரை திரும்பி கொண்டிருப்பதாகவும் அவர்களுடன் மீன்வளத்துறை அலுவலர்கள் தொடர்பில் உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு!