பிகாரை சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14ஆம் தேதி, மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் குறித்து பிகார் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசியல் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த சிவசேனா எம்பி., சஞ்சய் ரவுத், "மறைந்த நடிகர் சுஷாந்திற்கும், அவரது தந்தைக்கும் இடையிலான உறவில் நீண்ட நாள்களாக பிரச்னை இருந்துவருகிறது என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, நடிகர் சுஷாந்தின் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு பரப்ப சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ நிராஜ் குமார் சிங், இறந்த நடிகரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இதுகுறித்து நடிகர் சுஷாந்தின் குடும்ப வழக்குரைஞர் அனிஷ் ஜா கூறுகையில், "நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக அண்மையில் சிவசேனா எம்பி., கூறிய கருத்துகளுக்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக அவருக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவருக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரித்தார்.
சுஷாந்தின் மரணம் தொடர்பான வழக்கில் தன்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டேன், கருத்து தெரிவித்தேன். அதில் ஏதாவது தவறிருந்தால் அதுகுறித்து ஆராய்வேன் என சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.