கோவிட்-19 வைரஸ் தொற்று உலகெங்கிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது. ஏனெனில், கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் தற்போது மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
இந்த கடுமையான சூழ்நிலையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு முடிந்தவரை ஆதரவாக இருக்க முயல்கின்றன - அவர்களை பணிநீக்கம் செய்வதை விட சம்பளம் இல்லா விடுப்பில் செல்ல கேட்டுக் கொண்டு இருக்கின்றன.
ஊழியர்கள் தற்போது ஊதியம் இல்லாத விடுப்பிலிருந்தாலும், அவர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் Pay roll எனப்படும் ஊதிய பட்டியலில் தொடர்ந்து இருப்பார்கள்.
இந்த நடவடிக்கையானது முதலாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில் உள்ளது. தற்போதுள்ள நிலைமை சீரானதும் முதலாளிகள் தங்கள் தொழில்களைத் தொடங்கிவிடுவார்கள். இருப்பினும் திடீரென்று வருமானம் நிறுத்தப்படுவதால் கடுமையாகப் பாதிக்கப்படுவது தொழிலாளிகள்தான்.
இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
பிரிட்டன்:
தற்போதுள்ள சூழ்நிலையில் தற்காலிக விடுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தில் 80 விழுக்காட்டை மானியங்களாக அரசு வழங்கியுள்ளது. மார்ச் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அரசின் கரோனா வைரஸ் வேலை தக்கவைப்பு திட்டம், ஒரு தொழிலாளிக்கு அதிகபட்சமாக மாதம் £2,500 வரை வழங்க வழிவகை செய்துள்ளது
அமெரிக்கா:
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்தவர்களுக்கும் ஊதியம் பெறாமல் கட்டாய விடுப்பில் இருப்பவர்களுக்கும் ஊதியம் வழங்க 2 டிரில்லியன் டாலர்களை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒதுக்கியுள்ளது.
பிரான்ஸ்:
வைரஸ் தொற்றால் வேலையிழந்தோர் கட்டாய விடுப்பில் இருப்பவர்களின் பொருளாதார தேவைகளை அரசு ஏற்றுக்குக் கொள்ளும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார். நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவ 45 பில்லியன் டாலர் மதிப்புள்ள பேக்கேஜூகள் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா:
வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 130 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க, உதவ மானியம் வழங்கவுள்ளதாக அரசு அறிவித்ததுள்ளது. அதன்படி 15 நாள்களுக்கு ஒரு முறை அந்நாட்டு ஊழியர்கள் $ 1,500 ஆஸ்திரேலிய டாலர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்வீடன்:
ஸ்வீடனில், தொழிலாளர்களின் ஊதியத்தில் பெரும்பாலான தொகையை மானியமாக வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது, இதனால் அவர்களால் 90 விழுக்காடு ஊதியத்தை பெற முடிகிறது. அதேபோல வேலை நேரமும் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
டென்மார்க்:
டென்மார்க் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவில்லையென்றால், அவர்களின் சம்பளத்தில் 75 விழுக்காடு வரை மானியமாக வழங்குவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.