நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். கரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்களுக்கு அருகில், அவர்களின் குடும்பத்தினரை அனுமதிப்பதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் குடும்பத்தினர் பார்ப்பதற்கான அனுமதியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், "உயிரிழந்தவரின் உடல் பொதுவான இடத்தில் 30 நிமிடங்களில் வைக்கப்படும். அப்போது, குடும்பத்தினர் உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு நடத்திக் கொள்ளலாம்.
கரோனா நோயாளி உயிரிழந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனை தரப்பில் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். நோயாளிகளுக்கு டிரான்ஸ்பரன்ட் முகப்பகுதி கொண்ட உடை பயன்படுத்தப்படும். இறுதிச்சடங்கிற்கு வரும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான முகமூடிகள், கையுறைகள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளால் வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.