மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (75). இவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக 2000ஆம் ஆண்டு முதல் 2011 வரை 11 ஆண்டுகள் பதவி வகித்தவர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவருக்கு திடீரென்று மூச்சுத் திணறலும் ரத்த அழுத்தக் குறைவும் ஏற்பட்டது. இதனால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. நுரையீரல் தொடர்பான நோயால் அவர் அவதிப்பட்டுவருவதாகவும் சிகிச்சைக்குப் பின் தற்போது அவரது உடல்நிலை சீராகியுள்ளதாகவும் மருத்துவமனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை சீரானதையடுத்து நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அடுத்த சில வாரங்களுக்கு வீட்டிலேயே அவருக்குச் சிகிச்சையளிக்கப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.