மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது.
வருகின்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அதிகளவிலான இடங்களை வெல்ல பாஜக வியூகம் வகுத்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை வீழ்த்தும் முனைப்புடன் பாஜக செயல்பட்டுவருகிறது.
மாநிலத்தின் கள நிலவரம் அறிந்து வியூகம் வகுக்க திட்டமிட்ட பாஜக தலைமை, நவம்பர் மாதம் தனது கட்சியின் உயர்மட்ட அலுவலர்களை மேற்கு வங்கத்திற்குச் சுற்றுப்பயணம் அனுப்பி மாவட்டம், ஊராட்சி வாரியான கள நிலவரத்தையும், மாநிலத் தேர்தல் பணியில் கட்சியில் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கலாம் என்பது குறித்தும் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மாநிலத் தேர்தல் நிர்வாகக் குழுவின் தலைவர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு வங்க மாநிலத் தேர்தல் அறிக்கைக் குழுவில் ஸ்வபந்தாஸ் குப்தா, அனுபம் ஹஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லாக்கெட் சாட்டர்ஜிக்கு 'எம்.பி. பிரபாஸ்' பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் மாநிலத் தேர்தல் நிர்வாகக் குழுவில் உள்ள பல்வேறு துறைகள்: யுவா, அகதிகள் மற்றும் மாதுவா திட்டம், தேர்தல் அலுவலகப் பொறுப்பாளர், தேர்தல் ஆணைய கன்வீனர், அரசியல் பிரச்சினை, தேர்தல் அறிக்கை, பஞ்சாயத்து பிரதான் தொடர்பு, எம்.பி. பிரபாஸ், வாக்குச்சாவடி மேலாண்மை, நிர்வாகம் உள்ளிட்டவை அடங்கும். மேற்கொண்ட பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அம்மாநிலத்திற்கு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாநிலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்து கட்சியை வலுப்படுத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ரஜினியின் முடிவை வரவேற்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர்!