மத்திய பாஜக அரசு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியிலுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்கும மனிதத்தன்மைக்கும் எதிரான ஒன்று" என்றார். இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
மதச் சிறுபான்மை அகதிகள் குடியுரிமை பெற உதவிய மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்த மேற்கு வங்க பாஜக உறுப்பினர்கள், இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
முன்னதாக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும் மேற்கு வங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்.ஆர்.சி.யில் திருநங்கைகள் நீக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு