சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழைப் பெய்து வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அதன் காரணமாக பிலாஸ்பூர் மாவட்டம் ரத்தன்பூர் பகுதியிலுள்ள குட்டகாட் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்ததால், நேற்று (ஆக.16) மாலை வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த வேளையில் வாய்க்காலில் குளிக்க இறங்கிய இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதன்பின் அவர் வாய்க்காலின் நடுவேயிருந்த கல் ஒன்றைப் பற்றி, அதன் மீது அமர்ந்திருந்தார்.
அதைப்பார்த்த மக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவல் துறையினர் விமானப்படையின் உதவியை நாடினர்.
உடனே விமானப்படையினர் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம் இளைஞரை இன்று(ஆகஸ்ட் 17) கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். சுமார் 18 மணி நேரமாக அந்த இளைஞர் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிகாரில் வெள்ளத்தால் தத்தளிக்கும் 14 மாவட்டங்கள்; சுமார் 55 லட்சம் மக்கள் பாதிப்பு!