சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்தவர் பாகீரதி பிரசாத் பிசாய்(75). விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள இவர், 1996ஆம் ஆண்டு முதல் தனது வீட்டின் மொட்டை மாடியில் விவசாயம் செய்து வருகிறார். கோதுமை, தானியங்களை வளர்ப்பதற்கு பல்வேறு விவசாய பிரதிநிதிகளுடன் பரிசோதித்தும் உள்ளார்.
தினம்தோறும் அன்றாட பணிகளை முடித்த பின், மொட்டை மாடிக்குச் சென்று தனது பயிர்களையும் காய்கறிகளையும் கவனித்துக்கொள்வதில் நேரத்தை செலவிடுகிறார் இந்த மொட்டைமாடி விவசாயி. இவரது இந்த வித்தியாசமான விவசாய முறையைப் பார்க்க பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் அவரது வீட்டிற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
மேலும், இவ்வாறு மொட்டை மாடியில் செய்யப்படும் விவசாயத்திற்கு ஆகும் செலவு, பாரம்பரிய விவசாயத்துக்கு ஆகும் செலவை விடக் குறைவாகும். மேலும் இதன் மூலம் காய்கறிகளைப் பூச்சித் தாக்குதல்களிலிருந்தும் எளிதில் காப்பாற்ற முடியும்.
இதுகுறித்து கருத்துக் கூறிய விவசாயத்துறை அலுவலர் ஒருவர், "இதுபோன்ற விவசாயம் ஒரு புது முயற்சி, இதற்காக அவருக்கு அரசு விருதும் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.