ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாடுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி "மக்கள் கூட்டணிக்கான குப்கர் பிரகடனம்" என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். இதற்கிடையே, மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் கூட்டணிக்கான குப்கர் பிரகடனம் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.
இதற்கிடையே, குப்கர் கூட்டணி தேச நலனுக்கு எதிராக உள்ளது என விமர்சித்த அமித் ஷா, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அக்கூட்டணியை ஆதரிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்த காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லவே காங்கிரஸ், குப்கர் கும்பல் விரும்புகிறது எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் கொண்டு வரத்தான் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். அதே குப்கர் கும்பலுடன்தான் கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்தீர்கள் என விமர்சனம் செய்துள்ளார்.