கடந்த மாதம் இந்தியா - சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் சீனா தனது ராணுவத்தை குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் எல்லையில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து எல்லையில் இருக்கும் படைகளை திரும்ப பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், லடாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது நேற்றிரவு இரு தரப்பு ராணுவத்திற்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கால்வான் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
மேலும், அவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேரந்த பழனி என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு பழனி 22 ஆண்டுகளாக சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலைத் தொடரந்து ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளுக்குமான தலைமை தளபதி பிபின் ராவத், மூன்று படைகளின் தளபதிகள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாக குளோபல் டைமைஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "திங்கள்கிழமை இரவு இந்திய படைகள் இரண்டு முறை எல்லையை தாண்டி வந்து சீன படைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கடும் மோதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, இந்திய வீரர்கள் எல்லையை தாண்டுவதைத் தடுக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை தணிக்கவும், அமைதியான சூழ்நிலையை நிலைநாட்டவும் இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டுள்ளது. மேலும், லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இந்த மோசமான தாக்குதலைத் தொடர்ந்து கால்வான் பள்ளத்தாக்கு, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையை தணிக்க அப்பகுதியிலுள்ள இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - சீனா இடைய எல்லையில் அமைதி திரும்பிவந்த சூழலில், இந்தத் தா்ககுதல் நடவடிக்கை மீண்டும் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவுடன் மோதல் - 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்