மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாகவே பாஜக, திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெற்ற பிறகு மேற்கு வங்கத்தில் தன் முழு செல்வாக்கைப் பயன்படுத்தி ஆளும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என பலரை தன் பக்கம் இழுத்து தன் கட்சியில் சேர்த்தது.
இந்நிலையில் இன்று பட்பாரா பகுதியில் பாஜக, திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாஜக குழு ஒன்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா தலைமையில் சென்றது.
குழுவில் சத்யா பால் சிங், வி.டி ராம் ஆகியோரும் இடம்பெற்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அலுவாலியா பேசுகையில், "பட்பாரா பகுதியில் நடந்த வன்முறையால் உள் துறை அமைச்சர் அமித் ஷா வேதனையில் உள்ளார். இதுபோன்ற வன்முறைகள் மேற்குவங்கத்தில் மட்டும்தான் நடக்கிறது" என்றார்.