பாஜக கவுன்சிலர்கள் சவிதா ஹுரகாட்லி, சாந்தினி நாயக் மற்றும் கோதாவரி பாத் ஆகியோர் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கோரியிருந்தனர். இருப்பினும், உள்ளூர் பாஜக தலைவர்கள் அவர்களது கோரிக்கையை நிராகரித்தனர்.
கட்சியின் முடிவு குறித்து ஏமாற்றமடைந்த மூவரும் தேர்தலின் இறுதி நாளில் காங்கிரசுக்கு வாக்களிக்க முடிவு செய்து, தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ சித்து சாவடி, வாக்களிக்க வந்த பாஜக கவுன்சிலர் சவிதா ஹுரகாட்லியை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்.
அதனை மீறியும் வாக்களிக்கச் சென்ற அவரை சித்து சாவடி கடுமையாக தாக்கியதில் சரிதா சரிந்து கீழே விழுந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரிதாவை மீட்டு பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான காணொலி காட்சி இணையத்தில் வைரலானது.
பாஜக பெண் உறுப்பினர் என்றும் பாராமல் தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.
இதுகுறித்து பேசிய சவிதா: "காவல்துறை அல்லது வேறு யாரும் எனக்கு உதவவில்லை. நான் பிழைத்ததே ஒரு அதிசயம். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'எதை படிக்கவேண்டும் என ஆட்சியும் அதிகாரமும் முடிவு செய்வது பன்முகத்தன்மையை அழித்துவிடும்'