ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு பகுதியில் புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து மருத்துவ குழுவினரிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டறிந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை விவரங்கள் குறித்து மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து வெங்கையா நாயுடு அப்போது கவலை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நோய் குறித்து வெங்கையா நாயுடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் விவாதித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய அரசின் சார்பில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட மூன்று குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
எலுரு பகுதியில் இந்த புதிய நோயால் மட்டும் தற்போது வரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு கரோனா தொற்று நெகட்டிவ் என வந்ததால் இது எந்த மாதிரியான நோய் என்ற குழப்பத்தில் மருத்துவர்கள் உள்ளனர். இதையடுத்து எலுரு பகுதியில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஆந்திராவில் பரவும் புதிய நோய் - 227 பேர் மருத்துவமனையில் அனுமதி!