கடந்த மாதம் ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்குள் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.
தற்போது ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், முதலமைச்சர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளார். இதனால் அம்மாநிலத்தில் குதிரை பேரம் தீவிரமடைந்திருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெய்சல்மாரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே டெல்லியில் உள்ள பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துவருகிறார். நேற்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த நிலையில், இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ராஜஸ்தான் அரசியல் நிலை பற்றி ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி வரும் நிலையில், ராஜஸ்தான் அரசியல் வட்டாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய தூய்மை மையத்தைத் தொடங்கி வைத்த மோடி