பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் கரோனா தொற்று காரணமாக, சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனிடையே, அவர் பிணை கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக, மகாராஷ்டிரா அரசு, தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ”உடல்நிலையைக் காரணம் காட்டி வரவர ராவ் பிணை கோருவதில் உள்நோக்கம் உள்ளது, கரோனா சூழல், வயதுமூப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி பலன்பெற அவர் முயற்சி செய்கிறார்” என தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "சிறைத் துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததன் மூலம் ராவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது.
மே 28ஆம் தேதி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட ராவ், ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின், அறிகுறிகள் தென்படாத காரணத்தாலும் சீரான ரத்த ஓட்டம் இருந்ததாலும் ஜூன் 1ஆம் தேதி அவர் சிறைக்குத் திரும்பினார். மருத்துவமனை அளித்த அறிக்கையின்படி, அவரைப் பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
வரவர ராவ் தற்போது, மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 81 வயதான அவருக்கு கரோனா தொற்று ஜூலை 15ஆம் தேதி உறுதியானது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அலுவலர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ராவின் உடல்நிலை சீராக உள்ளது என்பதால் பல்நோக்கு மருத்துவமனையில் அவரை அனுமதிப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: இந்திய-சீன எல்லை விவகாரம்: நாளை பேச்சுவார்த்தை?