உலக நாடுகளை அச்சுறித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கியதால் ஏராளமான இந்தியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அவர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்ட நடவடிக்கையாக 12 நாடுகளில் சிக்கித்தவிக்கும் 14,800 இந்தியர்களை மீட்க மே 7 முதல் மே 13ஆம் தேதிவரை 64 விமான சேவைகள் இயங்கவுள்ளன.
அதன்படி, சிங்கப்பூர், ஐக்கிய அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விதமாக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் நேற்று கொச்சி, கோழிக்கோடு, புதுடெல்லியிலிருந்து புறப்பட்டன. நேற்ற இரவு 11. 30 மணிக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று காலை 11.30 மணிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, கேரளாவிலிருந்து இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் நேற்று வளைகுடா நாடுகளுக்கு புறப்பட்டன. கொச்சியிலிருந்து அபுதாபிக்கும், கோழிக்கோட்டிலிருந்து துபாய்க்கும் விமானங்கள் புறப்பட்டன.
இதையும் படிங்க: ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு: மோடி இரங்கல்