கரோனா தடுப்பு மருந்தின் அவரச பயன்பாட்டிற்கு பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இன்னும், சில வாரங்களில் இந்தியாவிலும் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்படும் என்று தகவல் பரவின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், "விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு கரோனாவை பரப்பாமல் இருக்க ஒருவர் நிச்சயமாக தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல்வேறு தடுப்பு மருந்துகளும் சோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. கரோனா தடுப்பு மருந்திற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும். முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே தடுப்பு மருந்துகளுக்கு அனுமதியளிக்கப்படும்.
மேலும், ஒருவர் 21 நாள்கள் இடைவெளியில் கரோனா தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டும். புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்துகளை எடுத்து கொள்பவர்களும்கூட கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம். இதனால் எந்த சிக்கலும் ஏற்படாது.
இந்தியாவில் தடுப்பு மருந்து படிப்படியாக வழங்கப்படும். முதலில் அதிகம் ஆபத்தானவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படும். அதன்பின் 50 வயதைக் கடந்தவர்களுக்கு வழங்கப்படும். பின்னரே தடுப்பு மருந்து மற்றவர்களுக்கு வழங்கப்படும்.
கரோனா தடுப்பு மருந்தை பெற விரும்புவர்கள் முதலில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தடுப்பு மருந்து வழங்கப்படும் தேதியும் நேரமும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். பின் அரசு வழங்கியுள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் தடுப்பு மருந்து வழங்கும் இடத்திற்கு சென்று ஒருவர் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாயிகளின் போராட்டத்தால் கரோனா குறைந்துள்ளது'