காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரதேச காங்கிரஸ் குழுவின் (Pradesh Congress Committee) முன்னாள் தலைவருமான வி.ஹனுமந்த் ராவுக்கு(72) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹனுமந்த் ராவ், தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கியதாகவும் அன்று முதலே அவருக்கு உடல்நலம் பாதிக்க தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நேற்று (ஜூன் 20) பரிசோதிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது வரை ஏழாயிரத்து 72 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 363 பேர் தற்போது மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மூன்றாயிரத்து 506 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 203 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி இதுவரை உயிரிழந்தனர்.
முன்னதாக, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்னுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் ஒரே நாளில் 3,630 பேருக்கு கரோனா!