பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியின் பின்னரே மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உத்தரகாண்ட் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றும், ஆனால் வீட்டுப்பாடம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பள்ளியைத் திறக்க வழங்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும் மாநில அரசு பின்பற்றியுள்ளது. நவம்பர் 2ஆம் தேதிமுதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும்.
ஆனால் பெற்றோரிடமிருந்து, எழுத்துப்பூர்வ அனுமதியின் பின்னரே மாணவர்கள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்" என மாநில கல்வித் துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே கூறினார்.
"வகுப்புகள் மீண்டும் தொடங்கிய பின்னர் மாணவர்கள் படிப்படியாக இயல்பான வகுப்பறைச் சூழலுக்கு கொண்டுவரப்படுவார்கள். அடுத்த இரண்டு-மூன்று வாரங்களில், ஆன்லைன் ஆய்வுகள், பிற கல்வி நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும்.
மாணவர்கள் மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தப்படுவர்" என்று கல்வித் துறைச் செயலர் ஆர். மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.