இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். பின்னர், அங்கிருந்து காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், தனக்கும் மோடிக்குமான உறவு சிறப்பாக உள்ளது என்றார். தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடியுடன் இது குறித்து பேசியதாகவும் அமைதி ஒப்பந்தம் நிறைவேறுவதை இந்தியா பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் வன்முறை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மதச்சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசியதை குறிப்பிட்டு, 'மக்கள் மதச்சுதந்திரத்துடன் இருக்க வேண்டும்' என்று மோடி தெரிவித்ததையும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
இந்தியா அதற்காகக் கடுமையாக உழைத்துவருவதாகக் கூறிய ட்ரம்ப், நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவம் குறித்து மோடியுடன் பேசவில்லை என்பதையும் அவர் சொன்னார்.
இதையும் படிங்க: பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!