நாடு முழுவதும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் நடைபெற்றுத்தான் வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் பெகராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் உள்பட மூன்று பேர் பாலியல் வன்புணர்வுசெய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் தந்தை அளித்துள்ள புகாரில், தனது 10 வயதுடைய தங்கையுடன் மகள் வீட்டின் அருகேயுள்ள தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள், தனது மகளை அருகிலுள்ள கரும்புக் காட்டிற்கு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியுடன் சென்ற தங்கை கத்தியதால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக, மூன்று இளைஞர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்புணர்வு), 120 பி (குற்றவியல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடிவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை இறந்த பரிதாபம்