லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்திலுள்ள திலாரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமேனும் தெரிவித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கூறி தாக்கியுள்ளார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் இது குறித்து எவ்வித தகவலும் கூறாமல் இருந்தார். பின்னர், குடும்பத்தினர் இத்தகவலை அறிந்து ஜலல்பூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது அண்டை வீட்டில் வசித்த அரவிந்த் என்ற நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார்.
பின்னர், அவர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், இந்த சம்பவம் குறித்து யாரிடமேனும் கூறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியதுடன் அப்பெண்ணைத் தாக்கி, வீட்டின் கூரையிலிருந்து தள்ளியுள்ளார் என்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர் விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவர் கோபி கிளை சிறைக்கு மாற்றம்!